எங்களைப் பற்றி...

தேச நலன் என்பது விடுதலையால் மட்டும் விளைந்துவிடாது; நமது ஒவ்வொரு செயலும் ஈடுபாடும் மொழியும் கல்வியும் கலையும் அதற்குப் பாடுபட வேண்டும் என முற்றிலும் உணர்ந்த தீர்க்கதரிசிகள் ஐவர், கல்கி இதழின் இலக்கை நிர்ணயித்து நெறிப்படுத்தினார்கள் - கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி. சதாசிவம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ராஜாஜி, டி.கே.சி., என்ற அந்த ஐந்து பேரையும் இணைத்தது தேச பக்தி மட்டும் அல்ல... கலை ஆர்வமும் உயர் ரசனையும்கூட.

சுதந்தரப் போராட்டக் காலம். இந்தியாவின் மூலை முடுக்குகளெல்லாம் தேசிய உணர்வு ததும்பிக் கிடந்த சூழ்நிலை.

ஸ்ரீ வள்ளி நாடகத்தில் முருகன் வேடம் ஏற்றவர் திடீரென்று, ‘ராட்டினமே காந்தி கை பாணம்' என்று பாடியபோது ரசிகர்கள் நாடி நரம்புகள் முறுக்கேற சேர்ந்து பாடினார்கள்; கை தட்டித் தீர்த்தார்கள்.

கதாகாலட்சேபத்தின் முடிவில்,

'பாரத மாதாவுக்கும்
பக்தியுள்ள இந்தியர்க்கும்
காரணமான மகான்
காந்தியடிகளுக்கும்
நித்யானந்த மங்களம்
சுப மங்களம்'

என தெய்வ பக்திக்கு தேசபக்தியைக் கொண்டு முத்தாய்ப்பு வைப்பது இயல்பாய் நிகழ்ந்தது.

தீண்டாமை ஒழிப்பு, கள்ளுண்ணாமை, பெண்கள் கல்வியுடன் சமத்துவம் என்று சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பகிரங்கமாய்ப் பிரசாரம் செய்த திரைப்படங்களிலும்

'பந்தமகன்று நம் திருநாடு
உய்ந்திட வேண்டாமோ!
அதிர்ந்தொலித்தல் கேளாய் - சங்கம்
ஆர்த்திடும் முரசம் கேள்...'

என்று இசைப் பாடல் தேசிய அரைகூவல் விடுத்தது.

இத்தகைய சூழ்நிலையில் பிறந்த ஒரு பத்திரிகைக்கு தேச நலனே பிரதான நோக்கமாக அமைந்ததில் வியப்பில்லை.

'இந்தப் பத்திரிகைக்கு மூன்று நோக்கங்கள் உண்டு... முதல் நோக்கம் தேச நலன்; இரண்டாவது நோக்கம் தேச நலன்; மூன்றாவது நோக்கமும் தேச நலன்தான்' என்று முதல் கல்கி இதழில் எழுதினார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.

சமூக அவலங்களைக் களைந்து புதுயுகம் படைக்கும் உயர்நோக்குடன் அவர் ஏற்ற பத்தாவது அவதார புனை பெயரே பத்திரிகையின் பெயராகவும் அமைந்தது.

தேச நலன் என்பது விடுதலையால் மட்டும் விளைந்து விடாது; நமது ஒவ்வொரு செயலும் ஈடுபாடும் மொழியும் கல்வியும் கலையும் அதற்குப் பாடுபட வேண்டும் என முற்றிலும் உணர்ந்த தீர்க்கதரிசிகள் ஐவர், கல்கி இதழின் இலக்கை நிர்ணயித்து நெறிப்படுத்தினார்கள் - கல்கி கிருஷ்ணமூர்த்தி, டி. சதாசிவம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, ராஜாஜி, டி.கே.சி., என்ற அந்த ஐந்து பேரையும் இணைத்தது தேச பக்தி மட்டும் அல்ல... கலை ஆர்வமும் உயர் ரசனையும் கூட.

இன்று... அறுபதாண்டுகள் கடந்துவிட்டன. சுதந்தர இந்தியாவின் சிதறிய இலக்குகளை எழுச்சியோடு இணைக்கும் வலுவான சரடாக விளங்க கல்கியின் ஒவ்வொரு இதழும் இன்னமும் முயன்று வருகிறது. நடுநிலையோடு அரசியலை அணுகி, அழகுணர்ச்சியோடு கலைகளை ஆராய்ந்து, ஆர்வத்தோடு இலக்கியம் வளர்த்து, அக்கறையோடு சமூக மாற்றங்களை எடைபோட்டு, ஆழ்ந்த பொறுப்புணர்ச்சியோடு நமது ஆயிரமாயிரம் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி வருகிறது.

அமரர் கல்கிக்குப் பிறகு கல்கி சதாசிவம், அவருக்குப் பின் கல்கியின் மகனும் சதாசிவத்தின் மாப்பிள்ளையுமான கி. ராஜேந்திரன், இப்போது கி. ராவின் மகள் சீதா ரவி என மூன்று தலைமுறையாக ஆசிரியர்கள் கல்கி இதழின் ஆதாரப் பண்புகளையும் அடிப்படைக் கொள்கைகளையும் கைவிடாமல் செயல்பட்டு வருகிறார்கள்.

பத்திரிகையின் தோற்றத்தில், மொழியில் காலத்துக்கேற்ற மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன; ஆனால் தேச நலன் என்ற நோக்கத்தின் தெளிவு இன்னும் பளிங்கு போல் மின்னிக் கொண்டிருக்கிறது.

கல்கியைக் கொஞ்சம் கவனித்து வாசித்தால் இதை நீங்கள் உணர்வீர்கள்; எங்கள் உயர்நோக்கைப் பகிர்ந்துகொண்டு நிரந்தர வாசகராக மாறுவீர்கள். சுற்றம் - நட்புக்கும் இவ்விதழைச் சிபாரிசு செய்வீர்கள்.